திருக்குறளாசிரியர் சமயம்
- தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்
தமிழ் இலக்கியத்தில் சிறப்புற்றோங்கி வளரும் குறள் என்ற நீதி நூலைத்
தமிழ் நாட்டில் அறியாதவர் அறியாதவரே ஆவர். இந்நூல் அறம் பொருள்
இன்பம் என்னும் விஷயங்களின் பாகுபாட்டையும் அதனால் அடையும்
பயன்களையும் தெளிவாய்க் கூறுகின்றது. ஆரியருக்கு மனுதர்ம சாஸ்திரம்
சுக்கிர நீதி முதலிய நீதி நூல்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ,
தமிழருக்கு இந்நூலும் அப்பேர்ப்பட்டதே. இத்தகைய சிறப்பு வாய்ந்த
நூலை யியற்றியவர் யார்? அவர் எக்காலத்தவர்? அவர் சமயம் யாது?
என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாய் ஆராய்வோம்.
குறளின் நூலாசிரியர் திருவள்ளுவர் என்பர். அவர் கடைச் சங்க காலத்திற்கு
முன்னே இருந்தவர் ஆவர். இக்கடைச் சங்கமோ ஒன்றாவது இரண்டாவது
நூற்றாண்டில் இருந்ததாகத் தமிழ் ஆராய்ச்சி வல்லவர்கள் தக்க நியாயங்களைக்
கொண்டு ஸ்திரப்படுத்தி யிருக்கின்றார்கள். ஆகையால் வள்ளுவர் காலமும் 1,
2 நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே என்று ஏற்படுகின்றது. ஏனெனில் சங்கப்
புலவர்களாகிய நக்கீரர், நல்லந்துவனார், கபிலர், பாணர் முதலானோர்
இத்திருக்குறளின் கருத்திக்களையும் அடிகளையும், அடிகளின் தொடர்களையும்
கையாண்டு இருக்கிறார்கள். இம்மட்டோ! சைவ சமயாசாரியர்களான அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் முதலானவர்களும், வைணவ சித்தாந்த தேசிகர்களாம்
நம்மாழ்வார் முதலிய ஞானாசரியர்களும் குறட்பாக்களை
யெடுத்தாண்டிருக்கிறார்கள்.
இனி அவர் சமயத்தைப் பற்றி ஆராய்வோம்.
இவர் இன்ன சமயத்தினர் என்று துணிந்து கூறுவதற்குத் தகுந்த சான்று
இல்லை என்பார் ஒரு சாரார்; மற்றொரு சாரார் இவரைச் சைவர் என்பர்.
அவர்கள் அப்படிக் கூறுவதற்குக் ‘கடவுள் வாழ்த்தில்’ குறளாசிரியர்
“எண்குணத்தான்” என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தியிருப்பதாலும்,
அச்சொற்றோடர் சிவபிரானுக்குத்தான் பொருந்தியுள்ளது என்றும் அவர்கள்
கொண்ட கொள்கைக்கு காரணங் காட்டுவர். மற்றும் அவர்கள் கூறும்
மற்றொரு காரணம் ஒளவை அவர் தமக்கையாம்; அவள் சிவபக்தனாம்.
ஆகையால் இவரும் சிவபக்தராய்த்தான் இருந்திருப்பாராம். ஏதொ ஒரு
தனிப்பாடலில் “பூவில் அயனும் புரந்தானும்” என்று கூறிச் சிவனைப்
புகழ்ந்திருக்கிறாராம். அதுவும் அவரது சைவ சமயத்தைத் தெளிவாய்க்
கூறுகின்றது என்றும் உரைப்பர். இத்துடன் நில்லாமல் “நாயனார்” என்ற
பட்டம் சிவபக்தருக்குத்தான் உரியது என்றும் இவரும் அப்பட்டத்தை
வகித்ததால் இவர் சைவ சமயியாய்த்தான் இருக்கவேண்டுமென்றுங்கூறி
வாதிடுவர்.
இம்மூன்று கொள்கைகளும் நியாய வாயிலாக யோசிக்குமிடத்து ஒன்றும்
நிலைக்கு நில்லா. “எண் குணத்தான்” என்ற சொற்றொடர் சிவனை
மாத்திரமா குறிக்கின்றது? விஷ்ணுவையும் “எண் குணத்தான்” என்று
திருச்சந்த விருத்தம் முதலிய வைணவ நூல்கள் கதறுகின்றனவே!
அருகரையும் “எண் குணத்தான்” என்று அருகநூல் சாதிக்கின்றது.
ஆனால் கடவுள் வாழ்த்தில் “எண் குணத்தான்” என்றும், “மலர்மிசை
யேகினான்’ என்றும், “பொறிவாயிலைந் தவித்தான்” என்றும், “பகவன்
வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், “அறவாழி அந்தணன்”
என்றும் வரும் சொல்லையும் சொற்றொடர்களையும் உபயோகப்படுத்துவதாலும்
அவைகள் அருகருக்கே உரியவை யென்று நிகண்டு முதலிய நூல்கள்
சான்று கூறுவதாலும் “எண் குணத்தான்” என்று குறளில் வழங்கியிருப்பது
அருகரைக் குறித்தே அல்லாமல் சிவனைக் குறித்து அல்ல.
“ஒளவையார் சைவர், அவர் தம்பியாகிய இவரும் சைவர்” என்பதும்,
“பூவில் அயனும்” என்ற ஒருதனிப்பாட்டையும் இதற்கு அனுகுணமான
ஓர் ஆதாரமற்ற கதையையும் மேற்கோளாகக் காட்டுவதும் ஒப்புக்
கொள்ளத்தக்கன அல்ல. ஏனெனில் குறளில் எங்கேயாவது சிவனையாவது
சைவ வழிப்பாட்டைப் பற்றியாவது கூறியிருக்கின்றாரா? மருந்துக்கும்
காணோமே!
இதுபோக வைணவர் இவரை வைணவர் என்று கூறுவர். இதற்குக் காரணம்,
இவர் குறளில் “தாமரைக் கண்ணான் உலகு” என்று உபயோகப்படுத்தியிருப்பதால் அத்தொடர் விஷ்ணுவைத்தான் குறிக்குமே யல்லாது, மற்றத்தெய்வத்தைக்
குறிக்காது என்ற பிடிவாதக் கொள்கைதான். “தாமரைக் கண்ணான்” என்ற
சொற்றொடருக்கு இந்திரன் என்ற பொருளிலும், கம்பர் பலதடவையில்
உபயோகப்படுத்தி யிருக்கிறார். ஆகையால் வைணவர் கூற்று உபயோகமற்ற
கூற்றாய் முடிகிறது.
பெளத்தர் என்றாலோ, பெளத்தர்கள் ஜீவனில்லை மறுபிறப்பில்லை
என்கிறார்கள். கொல்லாமை, புலால் மறுத்தலை இவர்கள் வெறுக்கவில்லை.
ஜீவன் உண்டு என்றும், மறுபிறப்பு உண்டென்றும், கொல்லாமையையும்
புலால் மறுத்தலையும் குறளில் வற்புறுத்தி யிருக்கிறார். ஆகையால்
வள்ளுவர் பெளத்தர் ஆகார்.
ஆனால், இவர் சமணர்தான் என்று சொல்வதற்குத்தக்க நியாயங்கள்
உள்ளன. கடவுள் வாழ்த்தில் பகவன், அறிவன், மலர்மிசை ஏகினான்,
இறைவன், ஐந்தவித்தான், அறவாழி அந்தணன், எண்குணத்தான்
என்று அருகக் கடவுளுக்குப் பெயராக வழங்கும் சொற்களை
உபயோகப்படுத்தியிருப்பதும், அருகசரணம், சித்தசரணம், சாது சரணம்,
தர்மசரண்ம் என்ற ஜைன சமயத் துதியாகிய நான்கிற்கும் பதிலாகக்
கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்திக்
கூறுதலாலும் இவர் சமணரே என்க. இவர் அருகனைக் குறிக்கும்
சொற்களையே சிலப்பதிகாரம், சிந்தாமணி, நிகண்டு முதலியவற்றிலும்
கூறிருப்பதும் காண்க:- “அறிவன், அறவோன், அறிவரம்பிகந்தோன்”,
“செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்”, “இறைவன்”,
எண் குணத்தான்” ஐவரை வென்றோன்”, மலர்மிசை நடந்த மலரடி”—
சிலப்பதிகாரம்.” பகை நண் போடிப்பான்” –சிந்தாமணி “அறவாழி அந்தணன்”
–திவாகரம், ஆயினும் சிலர் “உலகியற்றியான்” அந்தணர் நூல்
“மறப்பினும் ஒத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”
“அறு தொழிலோர் நூன் மறப்பர்” என்று திருக்குறளில் வழங்கியிருப்பதைக்
கொண்டு சமணக் கொள்கையை மறுக்க எழுவோர் பரிமேலழகர் வைதீக
மதக் கொள்கைகளையும் கதைகளையும் யுக்திக்குத்தகுந்தவாறு புகட்டி
வலிந்து பொருள் கொள்வதை ஆராய்ச்சி செய்யாதவரேயாவர். ஆனால்,
சமணக் கொள்கைகளையும் கதைகளையும் ஆதாரமாகக் கொண்டு சொல்
கடந்த வழியே பொருள் நோக்கினால் பரிமேலழகரே வலிந்து பொருள்
கொண்டாரென்று தெரியும்.
தொல்காப்பியச் சூத்திரத்தில் “வினையினீங்கிய” என்ற செய்யுளுக்கு
பொருத்தமான பொருள் நோக்கில் வினையில் கொஞ்ச காலம்
சம்பந்தப்பட்டிருந்து பின்பு நீங்கிய அறிவையுடையவன் இறைவனாகும்
என்று புலப்படுகிறது. இவ் வடைமொழிகள் அருகருக்கு பெருந்தி
இருப்பதுபோல மற்ற தெய்வங்களுக்குப் பொருந்த வில்லை. ஜைனர்
கொள்கைப் பிரகாரம் அருகர் வினையிலே சிலகாலம் கிடந்து பிறகு
அதனின்று நீங்கி அறிவையடைந்து விளங்கினார் என்றும் மற்ற
தெய்வங்களுக்கு வினையே இல்லையென்றும் புராணங்கள் கூறுகின்றன்.
ஆகையால் தொல்காப்பியர் மதமும் ஜைனம் என்றே தெளிவாகின்றது.
சுபம்!
No comments:
Post a Comment